வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

5 மே, 2014

கடவுளின் குமாரன்

Son of God
நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தேன். எந்தவித இடையூறுகளும் இல்லாமல் அமைதியாக இப்படி ஒரு படத்தை என் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை.

படத்தில் உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் சீண்டல், முட்டல், மோதல், காதல், விரசமான பாடல் காட்சிகள் எதுவும் இல்லாததால் விசில் சத்தம் இல்லை. கைத்தட்டல்கள் இல்லை. வித்தியாசமான கமெண்ட்கள் இல்லை. படத்தின் இடையில் எழுந்து போவதும் இல்லாமல் படம் பார்க்க முடிந்தது.
எனக்கு இது ஆச்சர்யமாக இருந்தது.

அண்மையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிடப்பட்ட இயேசு படத்தைதான் பார்த்தேன்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் படம் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அவர்களில் அநேகர் கிறித்தவர்களாக இருப்பார்கள் என்றே எனக்கு தோன்றியது.

கிறித்துவை அணிந்தவன் என்ற முறையில் அந்த படத்தை பார்த்தேன். ஏற்கெனவே பரிசுத்த வேதத்தில் அடிக்கடி படித்து ருசித்தவைதான், என்றாலும் அவற்றை எப்படி விஷுவலாக கொண்டு வந்து நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்று ஆவலாக படம் பார்த்தேன்.

இயேசுவின் வாழ்க்கை வரலாறு குறித்த எத்தனையோ படங்கள் வந்து அவற்றை பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் இயேசுவின் சீடர் இயேசுவை குறித்து சொல்வதை போல் படம் தொடங்கி அவரின் முடிவு வரை படத்தில் வித்தியாசமாகவே காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தகக்து.

இயேசுவின் பிறப்பு, அவர் இந்த பூமிக்கு எந்த நோக்கத்திற்கு அனுப்பப்பட்டார், மக்களை கடவுளுக்கு நேராக திருப்ப அவர் ஆற்றிய அருளுரைகள், அதற்காக அவர் மேற்கொண்ட பணிகள், அவற்றின் மூலம் அவரிடம் இருந்து வெளிப்பட்ட அற்புதங்கள், அதிசயங்கள், இவற்றையெல்லாம் செய்ததற்காக அவர் அனுபவித்தப் பாடுகள், முடிவில் அவர் சந்தித்த மரணம், மரணத்திற்கு பின் அவர் தேவனின் குமாரன் - தெய்வத்தன்மை கொண்டவர் என்பதை வெளிப்படுத்த உயிருடன் எழுந்தது,  இவை எல்லாம் படத்தில் விஷுவலாக காட்சிப்படுத்தப்பட்டது.
அருகில் இருந்து பார்த்ததைப் போன்ற உணர்வு படம் முடிந்து வெளியே வரும்போது எனக்கு ஏற்பட்டது.

இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாமோ என்ற ஆதங்கமும் எனக்கு வெளிப்பட்டது.

வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் இந்தப் படத்தை பாருங்கள்.