வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

6 நவ., 2013

கேவலமான இளைஞன்!

நான் கடவுள் படத்தில் பிச்சை எடுப்பதற்காக மனிதர்கள் விற்பனை செய்யப்படுவதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அந்த காட்சியை பார்த்தபோது இப்படிக்கூட நடக்குமா? என்று நான் யோசித்தேன்.

நடைமுறையில் மனிதர்கள் கொத்தடிமைகளாக விற்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு மீட்கப்பட்ட செய்திகளை படித்த பிறகு, இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற முடிவுக்கு நான் வந்தேன்.

மதுரையில் ஒரு இளைஞன் (வயது 27) படுகொலை செய்யப்பட்டான். எதற்காக தெரியுமா? ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு நண்பனிடம் விற்ற மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த அழைத்ததற்காகத்தான்.

ஏழு ஆண்டுகள் குடும்பம் நடத்தி இரண்டு பிள்ளைகள் பெற்றெடுத்த ம்னைவி, அவரின் நண்பருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறிந்ததும் இருவரையும் அவன் கண்டித்திருக்க வேண்டும்.

மாறாக, கள்ளத்தொடர்பு வைத்திருந்த இருவரையும் அழைத்து விசாரித்து, ஒப்பந்தம் போட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு மனைவியை விற்றிருக்கிறான் கேவலமான அந்த இளைஞன்.

மனைவியும் மகிழ்ச்சியோடு பிள்ளைகள் இருவரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு காதலனுடன் சென்றிருக்கிறார். அதோடு எங்கேயாவது போய் செத்து தொலைந்திருக்கலாம் அவன்.

ஓராண்டு கழிந்த பிறகு திடீரென ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது. விற்ற மனைவியை மீண்டும் சந்தித்து பாவ மன்னிப்பு கேட்டு வாழ வருமாறு கேட்டிருக்கிறான். அவளோ, பணத்திற்கு விற்று விட்ட நீ ஏன் என்னைத் தேடி இங்கு வந்தாய்? என்று கேட்டு துரத்தியிருக்கிறாள்.

இதைக் கண்ட நண்பன், சமயம் பார்த்து அவனை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளான். 

அண்மைக்காலமாக குடும்ப அமைப்பு சிதைந்து கொண்டே வருகிறது. எங்கு பார்த்தாலும் கள்ளத்தொடர்பும், அதன் விளைவாக இதுபோன்ற கொலைகளும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

எல்லாவற்றையும் விட, பணத்திற்காக மனித குலம் எத்தகைய கீழ்நிலைக்கும் செல்கிறதே என்று நினைக்கும்போதுதான் மனம் வேதனை அடைகிறது.

இப்போதெல்லாம் செய்த தவறுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைத்து விடுகிறது என்ற நினைப்பும் சற்றே ஆறுதலாகத்தான் இருக்கிறது.